மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு வெளிநாட்டு தொடர்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கொரோனாவுக்கு 9 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது “ தமிழகம் முழுவதும் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 12,519 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயதுடைய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவருக்கு எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதயக் கோளாறு உள்ளிட்டவை உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

