கோயம்பேடு மூலம் பரவும் கொரோனா : பாதிப்பு 146 ஆக உயர்வு
கோயம்பேடு சந்தையை மையமாகக் கொண்டு கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேடு சந்தையை மையமாகக் கொண்டு சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்தது. அத்துடன் கோயம்பேட்டில் இருந்து தஞ்சாவூர் சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற மேலும் 8 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற 9 பேருக்கு ஏற்கெனவே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் திரும்பியவர்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் சென்றவர்களில் புதிதாக 32 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் சென்ற 7 பேருக்கு தொற்று ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் துரிதப்படுத்தியுள்ளன. இவ்வாறாக கோயம்பேடு மூலம் கொரோனா பரவிய நபர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.