இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டியுள்ளது. தமிழ்நாட்டில், மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பைப் பொறுத்து அவை ஆரஞ்சு, சிவப்பு, பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கோவையை பொருத்தவரை முன்னதாக 141 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் நேற்று 134 பேர் குணமாகி வீடு திரும்பினர். இந்நிலையில் 7 பேர் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சாயிபாபா காலனி அருகேயுள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சில வாரங்களுக்கு முன் கேரளா மாநிலம் மலப்புரம் சென்று வந்ததும் தெரியவந்தது. அங்கு இவர்கள் சீல் வைக்கப்பட்ட பகுதியில் அருகில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கேரளா செல்ல அனுமதிக்க கோரியபோது, பரிசோதனை செய்ய அறிவுறுத்தபட்டது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது இவர்களுக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.