கொரோனா அச்சம் : 24 விமானங்களின் சேவை சென்னையில் ரத்து
கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரொனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிரிக்கெட் போட்டிகள் ரத்து, கோயில்களுக்கு வர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஏர் இந்தியா 7 நாடுகளுக்கான தங்களின் விமான சேவையை ரத்து செய்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு 59 பன்னாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கொரோனா பாதிப்பு காரணமாக, வெளிநாட்டு விசாக்களை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குவைத், துபாய், சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 24 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்து வரை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.