மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மாவட்டம் முழுவதும் 95 மையங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், 18வயதுக்கு மேற்பட்டோருக்காக கூடுதலாக 15 சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 9 ஆயிரத்து 520டோஸ்கள் மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது. இந்நிலையில், 18வயதிற்கு மேற்பட்டோர், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, அரசு மருத்துவமனையில் உள்ள மையத்தில் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களை தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். 700பேருக்கு மட்டுமே தடுப்பூசி உள்ள நிலையில், தடுப்பூசி கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நாளை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், புதிதாக தடுப்பூசி வந்தால் மட்டுமே செலுத்த முடியும் எனவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.