நாகை: மூதாட்டிக்கு ஒரே நாளில் தவறுதலாக 2 முறை கொரோனா தடுப்பூசி - மருத்துவர்கள் கண்காணிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரேநாளில் தவறுதலாக இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மூதாட்டியின் உடல்நிலையை 3ஆவது நாளாக மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சரபோஜிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 16ஆம் தேதி அலமேலு என்ற 70 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக்கொண்டார். பின்னர் அவர் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தபோது அங்கு நின்றிருந்தவர்கள் மூதாட்டி அலமேலுக்கு தடுப்பூசி போட வில்லை என்று கருதி அவரை வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளனர்.
வரிசையில் நின்ற மூதாட்டி அலமேலுக்கு மீண்டும் தவறுதலாக சுகாதார செவிலியர் கோவிஷில்டு தடுப்பூசியை செலுத்தி உள்ளார். ஒரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே காய்ச்சல் உள்ளிட்ட தற்காலிக பாதிப்பு இருக்கும் நிலையில் ஒரே நாளில் இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூதாட்டி அலமேலு உடல் நலம் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் பூரண குணமடைந்த அந்த மூதாட்டி மருத்துவமனையில் 3வது நாளாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.