தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆறு நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதையடுத்து இன்று தடுப்பூசி வந்த நிலையில் முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டை: தடுப்பூசிகள் இல்லாததால் கடந்த ஆறு நாட்களாக யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டு இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கும் பொதுமக்கள் எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்று காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது, இந்நிலையில் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று மாதர் முன்னேற்ற சங்க திருமண மண்டபம் மற்றும் அம்பிகை வித்யா பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் நகராட்சி சுகாதாரதுறை சார்பில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
கன்னியாகுமரி: 5-நாட்களுக்கு பிறகு இன்று குமரி மாவட்டத்திற்கு 9600 கோவாக்சின் தடுப்பூசியும் 1500 கோவிஷீல்டு தடுப்பூசியும் வந்துள்ளது. இந்த தடுப்பூசியை நாகர்கோவில் மாநகராட்சி, கன்னியாகுமரி, தோவாளை, இராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், திருவட்டார், மேல்புறம் உட்பட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 33 தடுப்பூசி மையங்கள் வழியாக 18 வயது முதல் 44 வயது வரையிலான மக்களுக்கும் 45 வயதுக்கு மேலான மக்களுக்கும் செலுத்த திட்டம் இட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இதனால் இன்று காலையில் இருந்தே இந்த மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏராளமான மக்கள் குவிந்தனர்.
திண்டுக்கல்: கடந்த ஆறு தினங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு 15,000 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இதனையடுத்து இன்று திண்டுக்கல் நகரில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் சீலப்பாடி பஞ்சாயத்து என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இதனால் தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாமக்கல்: நகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக கொரோனா தடுப்பூசி போதிய கையிருப்பு இல்லாத நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு 9900 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. இவை, மாவட்டத்தில் உள்ள 72 மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. எர்ணாபுரம் அரசு நகர சுகாதார நிலையத்திற்கு 700 தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து காலை முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனையறிந்த நூற்றுகணக்கான பொதுமக்கள், தனிமனித இடைவெளி இன்றி நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.