சென்னையில் ஊர்க்காவல்படை காவலருக்கு கொரோனா தொற்று
சென்னை ஓட்டேரியில் ஊர்க்காவல்படை காவலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில்தான் அதிக பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று முந்தைய தினம் 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மட்டும் சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மக்களுக்காக பணியாற்றி வரும் காவலர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. கொரோனா பாதிப்பால் ஏற்கெனவே 2 காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை ஓட்டேரி ஊர்க்காவல்படை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அயனாவரம் பகுதியில் வசித்து வருகிறார்.
ஓட்டேரி மற்றும் புளியந்தோப்பு கட்டுப்படுத்துதல் மைய பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் உள்ள 10 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவரது மனைவியையும் தனிமைப்படுத்தி கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் 3-வது காவல் நிலையம் இதுவாகும்.