சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலருக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைப்போல, நுங்கம்பாக்கம் உளவுத்துறை காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் காவல்நிலையத்தை பூட்டி கிருமி நாசினி தெளிக்க உள்ளனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உதவி ஆணையர் அலுவலகம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. அங்கு பணிபுரியும் அனைவரும் கொரோனா மருத்துவ பரிசோதனை எடுத்து வருகின்றனர்.