நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா

நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா
நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் வருமானமின்றி நாட்டுப்புற கலைஞர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். அதனை மெய்ப்பிக்கும் விதமாக தை மாதம் தொடங்கி நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

தமிழகத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், நாதஸ்வரம், மேளவாத்தியம், பாவைக் கூத்து, தெருக்கூத்து, கனியான் கூத்து, வில்லிசை என லட்சக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்தான் சீசன் களைகட்டும். கோயில் திருவிழாக்கள், மேடை நாடகங்கள் என பல ஆர்டர்கள் குவியும். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஆர்டர்களும், இதன் மூலம் 2 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வருவாயும் கிடைக்கும். இந்த வருவாய்தான் ஆண்டு முழுவதும் அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரம்.

ஆனால், கொரோனா பெருந்தொற்று இவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது. கொரோனா முதல் அலையின்போது, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோயில் திருவிழாக்களுக்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் வருமானமின்றி, உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறார்கள். அரசு 2000 ரூபாய் நிவாரணம் அளித்தாலும்கூட, அதை வைத்து எவ்வளவு நாட்கள் வாழ்க்கையை நடத்த முடியுமென வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

கொரோனா 2ஆவது அலையும் தீவிரமாக பரவி வருவதால் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், துளிகூட வருமானமின்றி தவித்து வருகிறார்கள், நாட்டுப்புற கலைஞர்கள்.

இந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்புறக் கலைஞர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதையும் நாம் செய்திகளின் வாயிலாக பார்த்திருப்போம். மக்களை மகிழச் செய்யும் நாட்டுப்புற கலைஞர்கள், பசியால் கண்ணீர் விடுவதை தடுக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com