தமிழகம்: கொரோனாவால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 38 கர்ப்பிணிகள் உயிரிழப்பு!

தமிழகம்: கொரோனாவால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 38 கர்ப்பிணிகள் உயிரிழப்பு!

தமிழகம்: கொரோனாவால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 38 கர்ப்பிணிகள் உயிரிழப்பு!
Published on

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 38 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகப்பிரியா கொரோனா தொற்றால் காலமானார். எட்டு மாத கர்ப்பிணியான அவர் 90% க்கும் மேல் நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சண்முகப்பிரியா மட்டுமல்ல கடந்த 2 மாதங்களில் 64 கர்ப்பிணிகள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 38 பேர் கொரோனாவால் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சென்னையில் கர்ப்பிணிகளுக்கான பிரதான மருத்துவமனையாகத் திகழும் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் முதல் அலையில் 800 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 5 பேர் மட்டுமே உயிரிழந்தனர். அதிலும் 3 பேருக்கு இதய நோய்கள் இருந்த நிலையில், நேரடியாக கொரோனா பாதிப்பால் இருவர் மட்டுமே உயிரிழந்ததாக கூறுகிறார் மருத்துவமனை இயக்குநர் விஜயா.

ஆனால் இந்த 2-வது அலையில் 2 மாதத்திலேயே 200 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு ஏப்ரலில் 5 பேரும், இம்மாதத்தில் இதுவரை 4 பேரும் உயிரிழந்ததாக கூறும் விஜயா, கர்ப்பிணிகளின் இறப்பைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இரண்டாம் அலையின் வீரியமே இத்தகைய மரணங்களுக்கு காரணம் எனக் கூறும் மருத்துவர் சாந்தி, கொரோனா அறிகுறிகள் குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகள் உடனடியாக அரசு மருத்துவமனைகள் உதவியுடன் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். கண்டிப்பாக தொற்று உடைய நபர்கள் இருக்கும் இல்லத்தில் கர்ப்பிணிகளை வைத்திருக்க வேண்டாம் என்றும் கூறுகிறார்.

கர்ப்பிணி பெண்கள் இறப்பது கடந்த அலையில் மிக அரிதாக இருந்த நிலையில் இந்த அலையில் அனைத்து தரப்பினரையும் போலவே அவர்களும் உயிரிழப்பது வேதனையைத் தருகிறது என்றும், கர்ப்பிணிகளுக்கு இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி இல்லாமல் இருப்பதும் காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இந்நிலையில், கர்ப்பிணிகளும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற பரிந்துரையை National technical advisory group for immunization அமைப்பு சில தினங்களுக்கு முன்பாக மத்திய சுகாதாரத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது. எனவே மத்திய அரசிடமிருந்து விரைவில் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி அனுமதி கிடைக்கலாம் எனவும், அதன் மூலம் கர்ப்பிணிகள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com