“கொரோனா அறிகுறியா.. இங்கு வைத்து சிகிச்சை அளிக்காதீர்கள்” - மதுரையில் பரபரப்பு
துபாயிலிருந்து அழைத்து வரும் தமிழர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா இல்லையா என்பதை தங்கள் பகுதியில் வைத்து ஆய்வு செய்ய வெண்டாம் என மதுரை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அங்கு பணியாற்றி வந்த தமிழர்கள் 14 பேர் இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய் வழியாக தமிழகம் திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லியில் உள்ள அரசு பொது சுகாதார நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது, கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தேவையில்லாமல் கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் துபாயில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 200 பேர், இன்று மாலை தனி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அவர்களை மதுரையில் உள்ள கல்லூரிகள் மற்றும் அரசு பயிற்சி மையங்களில் தங்க வைத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் பரவிவிடும் என்ற அச்சத்தில், அவர்களுக்கு தங்கள் பகுதியில் வைத்து சிகிச்சை அளிக்கக் கூடாது என விமானநிலையம் பின்புறம் உள்ள சின்ன உடைப்பு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

