இந்த கொரோனாவும் கடந்துபோகும்... - மீண்டவரின் ஃபேஸ்புக் பதிவு

இந்த கொரோனாவும் கடந்துபோகும்... - மீண்டவரின் ஃபேஸ்புக் பதிவு
இந்த கொரோனாவும் கடந்துபோகும்... - மீண்டவரின் ஃபேஸ்புக் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலம் பெற்றவர்கள் தாங்கள் சிகிச்சை பெற்ற அனுபவங்களையும் கருத்துக்களையும் சமூகவலைதளங்களில் எழுதிவருகிறார்கள். அண்மையில் நெல்லையைச் சேர்ந்த முற்போக்கு இலக்கிய ஆர்வலர் கடையநல்லூர் பென்ஸி, தனது கொரோனா கால அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில், "கொரோனா  வைரஸூம் நானும்" என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து…  

 "1977 ஆம் வருடம். மதுராந்தகம் தாலுக்கா, பொலம்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள ஹெமரிக்ஸ், தொழுநோய்ப் பயிற்சி நிலையத்தில்தான் எனது அரசுப் பணி தொடங்கியது. முதல் நாள் வகுப்பில் டாக்டர் செய்யது மரூஃப் (திண்டுக்கல்) அவர்களின் முதல் மேற்கோள், "தொழுநோயை எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் தொழுநோய் பற்றிய மூடநம்பிக்கைகளை மக்கள் மனங்களிலிருந்து அகற்றுவதுதான்  நம்முன் நிற்கும் சவால்" என்று அண்ணல் காந்தியடிகளின் குரலை எதிரொலித்தது ஞாபகங்களில். 

தொழுநோய்க்கே இப்படி என்றால் சர்வதேசத் தொற்றான  கரோனா வைரஸ், இதுவரை உலக மக்கள்தொகையில் 10 லட்சத்திற்கும் மேலானவர்களை மரணிக்கவைத்த வைரஸ் என்றால் எப்படி இருக்கும்!

ஜூன் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8  மணி அளவில், கரோனா ஸ்வாப் டெஸ்ட் பாசிடிவ் என்று முறையான தகவல் தொலைபேசிச் செய்தியாக வந்தது. தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை,  நகராட்சி சுகாதார அலுவலர், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர், சித்தா மருத்துவ அலுவலர், காவல்துறை சிறப்புப் பிரிவு என வரிசையாகத் தொலைபேசி விசாரிப்புகள்,  கேள்விகள், பரிந்துரைகள். 

காலை 7.45 மணியிலிருந்து எங்க தெரு, டிராக்டர் மூலம் கிருமி நாசினித் தண்ணீர் பீச்சியடிக்கப்பட, ப்ளீச்சிங் பவுடர் தெருக்களை வெள்ளை கலருக்கு மாற்றிக்கொண்டிருக்க, என்ன நடக்கிறதென்று தெரியாமல் இல்லக்கதவுகளில் கேள்விக்குறித் தலைகள். மேற்குப்பக்கமும் கிழக்குப் பக்கமும் அடைக்கப்பட்டு, திகைப்புடன் கன்டெய்ன்மென்ட் ஸோனாக   உருமாறிக்கொண்டிருந்தது எங்க தெரு. 

 காலை 8.00 மணிக்கு நகராட்சி துப்புரவு ஆய்வாளர், மேஸ்திரி, இரண்டு தலைமைக் காவலர்கள் (காவல்துறை சிறப்புப் பிரிவு), நேரில் இல்லம் வந்து  வெளியே நின்ற வண்ணம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் மிகக் கனிவாக. அனைத்துப் பணிகளும் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத், எஸ்டிபி கட்சியின் இளைஞர்கள் உதவியிலும் நகராட்சி ஊழியர்கள் ஒருங்கிணைப்பிலும் அரங்கேறிக்கொண்டிருந்தன. 

அந்த இளைஞர்கள் என் இல்லம் வந்து, "உங்கள் தேவைகளைச் சொல்லுங்கள், நாங்கள் உதவுகிறோம்" எனச் சொல்லி வாட்சப் எண் கொடுத்து, அடுத்த கணம் நான் வாட்சப் உதவிகள் தொடங்கின. கை உறைகளோடு எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவிக்கொண்டிருந்த  அபாரமான இளைஞர் படை அது.

மீண்டும் கரோனா சிகிச்சை மையம், தென்காசி. நான் தற்செயலாகக் கைகழுவும் இடத்திலிருந்து திரும்ப, ஒரு முடிச்சுபோல சூழ்ந்து நின்று மொபைலில் மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டு அறைக்கு கரோனா வார்டின் குறைகளைச் சற்று குரலை உயர்த்தி கூறிக்கொண்டிருந்தனர் பெண்கள். 

 ஒரு சென்னைக்காரப் பெண்ணை அழைத்து, மெதுவாக சைகையில் என்ன குறை எனக் கேட்டேன். இரண்டு நாட்களாக வார்டு பெருக்கவில்லை. சுத்தம் செய்யப்படவில்லை. உணவு மோசம். மேலும் உணவு மிகமிகத் தாமதமாக வருகிறது. கடைசியாக என்னிடம் ஃபோன் வர, நான், "பேசுவது யார்" எனக் கேட்க, அவர் சொல்ல, உரையாடல் திசைதிரும்ப, "அது சரி நீங்க இன்னும் தொகுப்பு ஊதியமா அல்லது காலமுறை ஊதியம் வந்துவிட்டீர்களா?" எனக் கேட்க, அவர் சிரித்துவிட்டார். தனது அடையாளம் தெரியக்கூடாது (இது உத்தரவாம்) என்பதில் மிகக்கவனமாக இருந்தார்.

மொத்தத்தில் கரோனா மையத்திலிருந்து ஒரு வெப்பக்காற்று ஆட்சித்தலைவர் அலுவலகம் பயணிக்க, அதற்குள் பிரச்சினையைத் திருநெல்வேலிக்கு வீச, எதிர்பார்த்தபடி அது பூமராங் ஆகத் திரும்பி இங்குள்ள தலைமை மருத்துவர் கைகளில். மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீடின்றி குறைகள் நிவர்த்திசெய்யப்பட்டன.

அன்று ஞாயிற்றுக் கிழமை.  மதிய உணவு சிக்கன் பிரியாணிக்கு மாறி இருந்தது. மாலை கிஃப்ட் பார்சலாகப் பழங்கள், தொடர்ந்து அனைவருக்கும் பால், மறுநாள் காலையில் வார்டு பெருக்கப்பட்டுச் சுத்தமாகக் கழுவப்பட்டு கிருமிநாசினி ஸ்ப்ரே என மொத்த வார்டும் புதுப்பிக்கப்பட்ட பளீச். தட்டுங்கள் திறக்கப்படும்.  ஆங்கில மருந்து, கபசுரகுடிநீர், கசாயம் போன்ற சித்தவைத்திய சிகிச்சைகள் வழங்கப்பட்டு, முதல் டெஸ்ட் எடுத்த பத்தாவது நாள் சிகிச்சைக்குப் பிறகான இரண்டு டெஸ்ட்கள் எடுக்கப்பட்டு, நெகடிவ் ஆன ஜூலை 2 ஆம் தேதி அன்றே டிஸ்சார்ஜ் செய்ப்பட்டேன்.

 அன்புகளாலும், விசாரிப்புகளாலும், நல்ல ஆலோசனைகளாகவும் இன்னும் நலம் விசாரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். நம்மை நாமே பாதுகாப்பது தேசத்தைப் பாதுகாப்பதற்குச் சமம். கரோனாவும் கடந்துபோகும்” என்று அந்தப் பதிவில் கடையநல்லூர் பென்ஸி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com