’நாளொன்றுக்கு 15 மணி நேரம்’- தஞ்சை மாநகராட்சி மயானத்தில் தொடர்ந்து எரியூட்டப்படும் உடல்கள்
தஞ்சையில் கொரோனா தாக்கம் படுமோசமாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் உடல்களை எரியூட்டும் பணிகள் நாளொன்றுக்கு 15 மணி நேரம் வரை நீடிக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 38,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 33 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 450-ஐ எட்டியுள்ளது. நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் ஈஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சியின் சாந்திவனம் மின்மயானத்தில் கடந்த சில மாதங்களாக ஒருநாளில் அதிகபட்சமாக 10 முதல் 15 உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுக்கு முன்னதாக மாதத்துக்கு 15 முதல் 20 உடல்களே தகனம் செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்த எண்ணிக்கை மோசமாக உயர்ந்து விட்டதால் உடல்களை எரிக்க டோக்கன் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு உடலை தகனம் செய்ய 45 நிமிடங்கள் வரை ஆவதால், எரியூட்டும் பணிகள் இரவு 11 மணி வரை நீடிக்கிறது.