தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசை; காத்திருந்து வாங்கிச் சென்ற மதுகுடிப்போர்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசை; காத்திருந்து வாங்கிச் சென்ற மதுகுடிப்போர்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசை; காத்திருந்து வாங்கிச் சென்ற மதுகுடிப்போர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், வருகிற 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், அரசு மதுபான கடைகள் 14 நாட்களுக்கு முழுவதுமாக மூடப்படுவதால் தமிழகம் முழுவதும் மது குடிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர்.

தருமபுரி:

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அரசு மதுபான கடைகளில், மதுபாட்டிலை வாங்க மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மதுபாட்டில்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று அதிக கூட்டத்தோடு முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல், முட்டி மோதி மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

திருத்தணி:

திருத்தணியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு அறிவித்த ஊரடங்கின் போது அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நாளை கடை இருக்குமோ இருக்காதோ என்ற ஆர்வத்தில் இன்றே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. விதிகளை காற்றில் பறக்கவிட்டு மதுபாட்டில்களை அதிகளவில் மது குடிப்போர். வாங்கிச் சென்றதால் தொற்று அதிகளவில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திருவாரூர்:

10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து நன்னிலம் அருகே உள்ள குமார மங்கலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பிரியர்கள் மது வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்தனர். குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்கால் பகுதிகளிலிருந்து மது பிரியர்கள் அதிக அளவில் குவிந்து சமூக இடைவெளியை மறந்து முகக்கவசம் இல்லாமல முண்டியடித்து வாங்கி சென்றதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது ஒரு நபருக்கு குறைந்தபட்ச அளவு மது வகைகள் வழங்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் அதனை மீறி மது பிரியர்கள் சாக்கு பைகளில் மதுபானங்கள் அள்ளிச் சென்றனர். இதனால் கள்ளச்சந்தையில் மது விற்பனைக்கு வழிவகுக்கும் என்பதால் போலீசார் உரிய கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 183 டாஸ்மாக் கடைகளும், 4 எலைட் கடைகளும் உள்ள நிலையில் இரண்டு வார பொது முடக்கத்தின் போது டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் பெருமளவில் மது பாட்டில்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில் தனிமனித இடைவெளி கேள்விக்குறியாகவே இருந்தது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க மதுப் பிரியர்கள் ரேஷன் கடையில் நிற்பதைப் போல கட்டை பைகளுடன் முழு ஊரடங்கு நாட்களில் தேவையான மதுபாட்டில்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் நின்றவர்களில் சிலர் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் இருந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் கூட்டத்தை கட்டுப்படுத்தி கொரோனா விதிகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் இன்று மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்படி, கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகளில் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து மது விற்பனையை போலீசார் பாதுகாப்போடு நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் இயங்கி வரும் மதுபான கடையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் மது பிரியர்களும் மது வாங்க காத்திருந்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இன்று காலை முதலே மது வாங்க கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் வேலூர் மாநகரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க அதிகபடியானோர் கூடினர். மேலும் சிலர் அதிகபடியான மதுபாட்டில்களையும் இப்போதே வாங்கிச்சென்று சேமித்து வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com