கொரோனா ஊரடங்கு: மோசமான நிலையில் திண்டுக்கல் பூட்டு தொழில்.!

கொரோனா ஊரடங்கு: மோசமான நிலையில் திண்டுக்கல் பூட்டு தொழில்.!
கொரோனா ஊரடங்கு: மோசமான நிலையில் திண்டுக்கல் பூட்டு தொழில்.!


கொரோனாத் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தங்கள் நிலைமை மோசமாகியுள்ளதாக திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் சில பொருட்களின் பெயரை சொன்னாலே ஊர் பெயரும் பின்னாலேயே நினைவுக்கு வரும். அந்த வகையில் பூட்டு என்றாலே திண்டுக்கல் என்பது நினைக்கு வருவது இயல்பான ஒன்று. சுமார் 100 ஆண்டு வரலாறு கொண்ட திண்டுக்கல் பூட்டுகள் ஏராளமான சொத்துகளின் நம்பகமான பாதுகாவலனாக இன்றும் திகழ்கின்றன. திண்டுக்கல்லில் கைகளால் தயாரிக்கப்பட்ட பூட்டு வகைகள் இன்றும் பிரமிக்க வைப்பவையாக இருக்கின்றன.

2 அல்லது 3 சாவி போட்டால் மட்டுமே போட்டால் மட்டுமே திறக்கும் பூட்டு, மறைவாக உள்ள பொத்தானை அழுத்திவிட்டு சாவியை திருகினால் மட்டுமே திறக்கும் பூட்டு, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக சாவியை நுழைத்தால் மட்டுமே திறக்கும் பூட்டு, இரட்டைத் துளைகளுடன் திருடர்களை குழப்பும் பூட்டு, கள்ளச்சாவியை போட்டால் அலாரம் ஒலி எழுப்பும் பூட்டு என வகை வகையான பூட்டுகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன.

திருடன் தவறான சாவியை நுழைத்தால் உள்ளிருந்து சரேலென வெளிப்பட்டு உடலில் குத்தும் சுருள் கத்தியுடன் கூடிய பூட்டும் பிரபலமானது. கொலைகாரன் பூட்டு என அழைக்கப்படும் இவ்வகை பூட்டுகள் சட்ட பிரச்னைகள் காரணமாக 40 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன. எந்த பொறியியல் கல்வியும் படிக்காமல் நுட்பமான தொழில் அறிவுடன் வெறும் மனக்கணக்குகளை மட்டுமே போட்டு கைகளால் தயாரிக்கப்பட்ட இப்பூட்டுகள் தமிழரின் அறிவாற்றலுக்கு ஒரு சான்றாகவே இன்று வரை பார்க்கப்படுகின்றன.

திண்டுக்கல் பூட்டுகளின் தனித்தன்மையை கவுரவிக்கும் வகையில் அவற்றுக்கு கடந்த ஆண்டு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன் சுமார் 2 ஆயிரம் உற்பத்தியாளர்களுடன் இயங்கி வந்த இந்தப் பூட்டுத்தொழிலில் சுமார் 60 உற்பத்தியாளர்களே உள்ளனர். குறைவான ஊதியம் காரணமாக பலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். அலிகார் பூட்டுகளும் , சீன பூட்டுகளும் தி‌ண்டுக்கல் பூட்டுத் தொழிலுக்கு பூட்டுப் போட்டுக்கொண்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் இவர்கள் கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தங்கள் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளதாக கூறுகின்றனர்.

இது குறித்து பூட்டுத்தொழிலாளி குமார் கூறும் போது “வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் தற்போது எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இப்போதுதான் பேருந்து வசதிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மக்கள் முறையாக தொழில் மேற்கொண்டு, வருமானம் ஈட்டி வீடுகள் கட்டினால் மட்டுமே எங்களை போன்றவர்கள் வாழமுடியும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com