ஊரடங்கிற்கு முன் 18; இன்று 411 -கொரோனா பாதிப்பில் விர்ரென்று மேல்நோக்கிச் செல்லும் தமிழகம்
தமிழகத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் தற்போது வரை கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மார்ச் 25-ஆம்தேதி 8 பேரும், 26-ஆம்தேதி ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அதன்பின் மார்ச் 27-ஆம் தேதி ஒருநாளில் மட்டும் 9 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
அதன்பின் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து கொண்டே வந்தது. மார்ச் 31-ஆம் தேதி ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி இந்த எண்ணிக்கை 110 ஆக உயர்ந்து அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஏப்ரல் 2ஆம் தேதி 75 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், நேற்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை ஊரடங்கிற்கு முன் 18 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 411ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 29ஆம் தேதி தமிழகத்தில் அரைசதம் அடித்த கொரோனா தற்போது தனது கோரப்பிடியை மேலும் இறுக்கியுள்ளது