தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக தமிழ்நாட்டில் அதிகரிப்பதை தொடர்ந்து, அதை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சியில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனொரு பகுதியாக, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 1-ந்தேதி முதல் வரும் 8-ந்தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பல மாவட்ட நிர்வாகங்களும் தங்கள் பகுதியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அப்படியான சில முன்னெடுப்புகளின் சிறு தொகுப்பு இங்கே...

புதுக்கோட்டை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டையில் சித்த மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு முகாமை அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று தொடங்கி வைத்தார். அப்போது கொரோனா தடுப்பு பணிகளில் சித்த மருத்துவத்தின் பங்களிப்பு குறித்து அவர் மருத்துவரிடம் கேட்டு அறிந்தார். பின்னர், புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் ‘இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை’யின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசூரக் குடிநீர், மூலிகை குடிநீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும் சித்த மருத்துவ பரிசோதனை முகாம், மூலிகை செடிகள் கொண்ட கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். அதன்பின் புதுக்கோட்டை நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை பொதுமக்களிடையே அதிகரிக்க கபசூரக் குடிநீர், மூலிகை குடிநீர் ஆகியன 10 ஆட்டோக்களின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் பணியினை அவர் தொடங்கிவைத்தார். அவருடன் இணைந்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவும் இப்பணியினை தொடங்கிவைத்து, இணைந்து கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்கள்.

நெல்லை: பாளையங்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “கொரோனா 3-வது அலையை எதிர் கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிக்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இப்போதைக்கு கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

3-வது அலையை எதிர் கொள்ளும் வகையில் கூடன்குளத்தில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பிளாண்டுகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதுபோன்று மாவட்டத்தில் 9 இடங்களில் கோவிட் கேர் சென்டர் செயல்பட்டு வந்தது. அதனை 24 மணி நேரத்தில் மீண்டும் செயல்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்சிஜன் என்பது தட்டுப்பாடு இல்லாமல் தேவையான அளவு உள்ளது, 3-வது அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்து தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி மற்றும் சித்த மருத்துவத்துறை சார்பில் பாளையங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ‘தடுப்பூசி செலுத்திக்கொள்வோம், முக கவசம் அணிவோம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம்’ என அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொது இடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமினையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தேனி: தேனியின் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் அனைவரும் பெரியகுளம் நகராட்சியுடன் இணைந்து பொது இடங்களில் கூடும் மக்கள், பேருந்துகளில் செல்லும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என உல சுகாதாரதுறை அறிவுரித்தி உள்ளதை எடுத்துக்கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நோய்ப்பரவலை தடுக்க பொதுமக்கள் பொது இடங்களுக்கும், வணிக நிறுவங்களுக்கு செல்லும் போது, பேருந்தில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா விதி முறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அவர்கள் வழங்கினர். முக்கவசம் அணியாமல் வந்த நபர்களிக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கினர். இந்த நிகழ்சியில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், தேனி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தியாகராஜன் மற்றும் பெரியகுளம் நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் ஆணையர் சுபாஷினி தலைமையில் கொரோனா பெரும் தொற்று குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து அம்மா உணவகத்தில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

தூத்துக்குடி: மாவட்ட காவல்தறை சார்பில் 3வது மைல் அருகே உள்ள எப்.சி.ஐ ரவுண்டானா அருகில் கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொரோனா 3வது அலை பரவலை தடுக்க முன்னேற்பாடாக எடுக்க வேண்டிய பாதுகாப்ப நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், லாரி ஓட்டுனாகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முககவசம், சானிடைசர், கபசரக்குடிநீர் உள்ளிட்டவற்றை எஸ்பி ஜெயக்குமார் வழக்கினார்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, காவல்துறையினர் கொரோனாவே எமனாக மாறியது போல் வித்தியாசமான வேடமணிந்த நபர் மூலம் பொதுமக்களுக்கு நூதன முறையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், தங்களின் கையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியும் "ஒழிப்போம் ஒழிப்போம் கொரோனாவை ஒழிப்போம்" என்பது போன்ற விழிப்புணர்வு பாடல்கள் பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கொரோனா வேடமணிந்த நபர் எமன் போல வேடமிட்டு, பஜார் பகுதியில் முகக்கவசம் அணியாமல் சுற்றிய பொதுமக்கள் - பேருந்து பயணிகள் - நடைபாதை வியாபாரிகள் அனைவரையும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் கடைகளில் தனிநபர் இடைவெளியை பின்பற்றவும் அறிவுரை வழங்கினார். நகர் காவல் நிலையம், எம்.எஸ்.கார்ணர், பஜார், அண்ணாசிலை மற்றும் பாம்பே மெடிக்கல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் பாலமுருகன் முகக்கவசம் அணியாமல் சென்ற சிறுவர் சிறுமியர்களுக்கு முகக்கவசம் அணிவித்து முகக்கவசம் அணியாமல் விட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினார். வித்தியாசமான விழிப்புணர்வு நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

கரூர்: கரூர் மாவட்டம், தாந்தோணிமலை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு கொரானா விழிப்புணர்வு பவுச் வழங்குவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். இந்த பவுச் வழங்கும் நிகழ்ச்சி இன்று துவங்கி கரூர் மாவட்டத்தில் உள்ள 592 நியாயவிலைக் கடைகளில் உள்ள 3 லட்சத்து 25 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கரூர் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு ரேஷன் ஸ்மார்ட் அட்டைகள் வைக்கும் இந்த பவுச்சில் கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களான முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளி மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை உணர்த்தும் வாசகங்களுடன் கூடிய படங்கள் மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஸ்மார்ட்கார்டுகளுக்கான பவுச் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பொதுமக்களுடன் கொரோனா விழுப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

திருவள்ளூர் : சென்னை செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி சார்பில் கொரானா மூன்றாவது அலை தடுப்பு விழிப்புணர்வு வார விழா நிகழ்ச்சி செங்குன்றம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம்  கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் தடுப்பு குறித்த விளக்கங்களை வியாபாரிகளிடம் எடுத்துக்கூறி தடுப்பூசி போடும் அவசியத்தை வலியுறுத்திப் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து செங்குன்றம் அனைத்து வியாபாரிகளுக்கு வியாபாரிகள் சங்க அடையாள அட்டை வழங்கப்பட்டது. 50-க்கு மேற்பட்ட செங்குன்றம் சுற்றுவட்டார வியாபாரிகள் சமூக இடைவெளி மற்றும் முக கவசத்துடன் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஒத்துழைப்புடன் அனைத்து வணிகர் பொதுநல சங்கம் மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில், பொதுமக்களுக்கான கொரோனா விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி , “சென்ற அலை கொரோனா தாக்கத்தை விட வருகின்ற மூன்றாவது அலையில் பரவும் தொற்றின் வீரியம் அதிகமாக உள்ளது. இது பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதை தடுக்க, அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தரவேண்டும்” என கூறி, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து வைத்தார்.

திருவாரூர்: திருவாரூரில், திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு மருத்துவமனை ஆயுஷ் மருத்துவப் பிரிவு மற்றும் லயன்ஸ் சங்கம் ஆகியவற்றின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் அனுஷா, ‘அடிக்கடி கை கழுவுவது ,வெந்நீர் அருந்துவது மற்றும் சூரிய ஒளியில் நடப்பது’ போன்றவை தொடர்பான அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆயூஸ் பிரிவு மருத்துவர்கள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்கள்: சுப.முத்துப்பழம்பதி, நாகராஜன், அருளானந்தம், வெ.செந்தில்குமார், ராஜன், நவநீதகணேஷ், வி.பி.கண்ணன், எழில். உதயகுமார், பாலமுருகன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com