“நான் குணமடைந்ததற்கு மிக முக்கிய காரணம்....” - கொரோனாவிலிருந்து மீண்ட எஸ்.ஐ

“நான் குணமடைந்ததற்கு மிக முக்கிய காரணம்....” - கொரோனாவிலிருந்து மீண்ட எஸ்.ஐ
“நான் குணமடைந்ததற்கு மிக முக்கிய காரணம்....” - கொரோனாவிலிருந்து மீண்ட எஸ்.ஐ

சென்னை காவல் துறையில் கொரோனா தொற்று உறுதியான  உதவி ஆய்வாளர் சிகிச்சை முடிந்து பணியில் சேர்ந்தார். காவல் துறை ஆணையாளர் விஸ்வநாதன் அவரை வாழ்த்தி வரவேற்றார்.

சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் 14 நாள் சிகிச்சை மற்றும் வீட்டில் 14 நாள் தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து இன்று காவல் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த அருணாச்சலத்திற்கு காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அருணாச்சலம் கூறுகையில், "கடந்த மாதம் பணியில் இருந்தபோது உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி கொரோனா பரிசோதனை செய்தோம். எனக்கு கொரோனா உறுதியான பின்பு உயரதிகாரிகள் என்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆலோசனை கூறினர். நான் மருத்துவமனையில் இருந்தவரை அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு ஊழியர்கள் என அனைவரும் சிறப்பாக கவனித்துக் கொண்டனர்..

நான் குணமடைந்ததற்கு மிக முக்கிய காரணம் காவல் துறை உயரதிகாரிகள் முதல் என்னுடன் பணியாற்றும் காவலர்கள் வரை என அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தது தான். என் மீது அக்கறை எடுத்து நம்பிக்கை அளித்தனர். அவர்களின் ஒத்துழைப்பிலே எனக்கு பாதி நோய் குணமாகியது. 14 நாள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் என் மீது மட்டுமில்லாமல் என் குடும்பத்தினர் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் கேட்டறிந்து உதவிகள் செய்தது மகிழ்ச்சியளித்தது.

28 நாள் முழுமையான சிகிச்சைக்குபின் 3 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததால் தற்போது பணியில் சேர்ந்துள்ளேன்" என்று கூறினார்.

இதையடுத்து சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து பணியில் சேரும் உதவி ஆய்வாளருக்கு காவல் துறை சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்ற காவலர்களும் நலமுடன் வீடு திரும்பி மக்கள் பணிக்கு வரவேண்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

கொரோனா பாதித்த காவலர்கள் மீது உடனடியாக அக்கறை செலுத்திய தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தற்போது வரை 190 காவலர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com