தொழில் நிறுவனங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை: ஆளுநர் உரை
கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “சிறுகடன் பெற்றவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு தமிழக அரசால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்திற்கு நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கால அளவும், 15 சட்டரீதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான கால அளவும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
தொழில் நிறுவனங்கள் கடன்பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவின் மீதான முத்திரை தீர்வை செலுத்துவதில் அளிக்கப்படும் விலக்கு, டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில்வரியை செலுத்துவதற்கான கால அளவும் 3 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க, தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை-கன்னியாகுமரி, சென்னை-பெங்களூரு தொழில் பெருவழியில் அமைந்துள்ள, தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வடமாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்