அரியலூரில் அதிகாலை நிறுத்தப்படும் வாகனங்கள்..! - காவலர்களின் ஆரோக்ய முயற்சி
அரியலூரில் அதிகாலை நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காக காவல்துறையினர் ஆரோக்யமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் காலம் என்பதால் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்கள் கூட்டத்தால், நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளன. அதேசமயம் தொடர் பணியால், பேருந்துகள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் சோர்வடைந்து, அதிகாலை நேரத்தில் அரை தூக்கத்தில் வாகனத்தை இயக்குகின்றனர்.
இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பரிதாப உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே இதை தடுப்பதற்காக அரியலூர் எஸ்பி சீனிவாசன் புதிய முயற்சி ஒன்றை கடைபிடித்து வருகிறார். அவரது அறிவுரைப்படி அரியலூர் நெடுஞ்சாலையில் இரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வரும் வாகனங்களை நிறுத்தும் காவல்துறையினர், ஓட்டுநர்களிடம் சிறிது நேரம் பேசுகின்றனர். அந்தப் பேச்சில் ஓட்டுநர்களின் அரைதூக்கம் கலைந்ததும், அவர்களுக்கு சூடான டீ அல்லது நீர் கொடுக்கின்றனர்.
இதனால் அவர்களின் தூக்கம் கலைந்து புத்துணர்வு கிடைக்கிறது. இதன்மூலம் அதிகாலை விபத்துகளும் குறைகின்றனர். இந்த நடைமுறைப்படி டி. பாலூர் காவல்துறையினரும் அதிகாலையில் ஓட்டுநர்களுக்கு டீ வழங்கியுள்ளனர். இந்த முறையை தமிழகம் முழுவதும் கடைபிடித்தால், பெரும்பாலான விபத்துகளை தடுக்கலாம் என ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

