“லீவுனு காதுல கேட்கறதோட சரி” - மன அழுத்த குறைப்பு பயிற்சி வகுப்பில் ஆதங்கப்பட்ட காவல்துறையினர்!
சேலம் மாநகர காவல்துறை சார்பில் காவலர்களுக்கான மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி இன்று நடைபெற்றது. சேலம் லைன்மேடு பகுதியிலுள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.
காவலர்களுக்கு பணிச்சுமை காரணமாகவும், குடும்ப பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்தான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதற்காக சேலம் மாநகராட்சி நிர்வாகம் ‘மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை’யில் இருந்து மனநல மருத்துவர்கள் காவல்துறையினருடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினையை கேட்டறிந்தனர். அப்போது பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களிடம் நெருக்கடியான பணிச்சுமையில் காதுகுத்து கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு எப்படி செல்வீர்கள் என்று கேட்டபோது, “அதுக்கு எல்லாம் எங்க போறது., லீவு அப்படிங்கிற வார்த்தை காதுல மட்டும்தான் கேட்க முடியுது” என மனக்குமுறல்களை கொட்டினர். பின்னர் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அண்மையில் டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில் காவல்துறையினர் விஷயத்தில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்கட்சிகளாலும் பல்வேறு தரப்புகளாலும் வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள், யோகா பயிற்சிகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.