சாத்தான்குளம் சம்பவம்: ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கமெண்ட் பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் பதிவிட்ட ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தவர் சதீஷ் முத்து. இவர் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் சாத்தான்குளம் நிகழ்வை குறிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய கமெண்ட் செய்து இருந்தார். அவரது கமெண்ட் வைரலாக பரவியது.
அப்பதிவானது காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும், சாத்தான்குளம் விவகாரத்தை நியாயப்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து மீண்டும் பதிவிட்ட காலவர் சதீஷ் முத்து தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக பதிவிட்டு இருந்தார். மேலும், தனக்கு தெரியாமல் யாரோ கமெண்டை பதிவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு, காவல்துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்திய காரணத்திற்காக காவலர் சதீஸ் முத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.