சாலையில் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்
சென்னை சூளைமேட்டில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளர் சாலையில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு சவுராஷ்ட்ரா நகரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பானுமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு நேரத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனை செல்வதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு பானுமதி நடந்து வந்துள்ளார். அப்போது வலி அதிகமானதால் சாலையோரம் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.
அந்நேரம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சூளைமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா, கர்ப்பிணியை மீட்டு அருகில் இருந்த பெண் துப்புரவு தொழிலாளியுடன் இணைந்து பிரசவம் பார்த்துள்ளார்.
இதையடுத்து பானுமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு கர்ப்பிணியை காப்பாற்றிய காவல் ஆய்வாளர் சித்ராவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.