
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், திரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், நடத்தப் போவதில்லை என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்தது.
இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அரசியல் அழுத்தம் இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்கள் வாயிலாகவும், சர்ச்சையைக் கிளப்பும் வகையில் போஸ்டர்களை ஒட்டியும் பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் நேரடியாக ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் சட்டமன்ற புகைப்படத்துடன் விஜய் இருப்பது போல், 'இன்று நீங்கள் நேரு அரங்கத்திற்கு வருவதை தடுக்கலாம் ஆனால், நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது' என சர்ச்சையை கிளப்பும் வார்த்தைகளுடன் கூடிய போஸ்டர்களை மதுரையில் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.