அண்ணாமலை தலைமையில் நடந்த திருமணத்தில் சர்ச்சை -திருமணம் செய்த 2வது நாள் குழந்தைக்கு முதல் பிறந்தநாள்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமணத்தில், ஏற்கனவே திருமணம் நடைபெற்ற 3 தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைPT Desk

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில், கடந்த 5 ஆம் தேதி 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தென்பசியார் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருமண ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்தார். இந்த திருமண ஏற்பாடுகளை தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார். இவர் பாஜக-வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைPT Desk

பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில், ஒரு ஜோடிக்கு தலா ரூ. 1 லட்சம் என்ற வீதத்தில் செலவு செய்யப்பட்டதாம். அதாவது தலா ஒரு ஜோடிக்கு... 4 கிராம் தாலி, மணமக்களுக்கு பட்டுடைகள், மணப்பெண்ணுக்கான அலங்கார ஏற்பாடு, கல்யாண கவரிங் செட், மணமக்களின் உறவினர்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு, தலா ஒரு ஐயர் மற்றும் மங்கள வாத்தியம், இருவேளை உணவு, திருமண பத்திர பதிவு மற்றும் திருமண உதவித்தொகை (தலா 25000 என கூறப்படுகிறது) உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

ஆனால், இங்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர்களில் சிலர், முன்பே திருமணம் ஆனவர்கள் என்றும், அவர்களில் சிலருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசாரித்தபோது, அங்கு திருமணம் செய்துக்கொண்ட ஒரு தம்பதியின் குழந்தைக்கு நேற்றைய தினம் பிறந்தநாள் என்ற தகவலும், இன்னும் இரு தம்பதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் நிலையில், அதே தம்பதிகள் கடந்த 5 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டதும் தெரியவந்தது.

திண்டிவனம் - கிடங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா (எ) கிறிஸ்டோபர் மற்றும் எபினேசர்; சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தம்பி எபினேசருக்கு இரண்டு குழந்தைகளும், அண்ணன் கிறிஸ்டோபருக்கு ஒரு குழந்தையும் உள்ளதாம். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கும், ஏற்கனவே மயிலம் கோயிலில் திருமணம் ஆகிவிட்டதாம்.

முதல் பிறந்தநாள் விழா
முதல் பிறந்தநாள் விழாPT Desk

ஆனாலும், இந்த 3 பேரும் தங்களுடைய மனைவியருடன் இந்த திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதேபோல் இன்னும் சில ஜோடிகள் இருக்கலாம் என கூறப்படும் நிலையில், பணம் மற்றும் நகைக்காக நிகழ்ந்ததா அல்லது திருமண ஜோடிகள் கிடைக்காமல் அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அண்ணாமலை நடத்திவைத்த இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக திருமணம் செய்துக்கொண்ட கிறிஸ்டோபர் - ராணி (பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் குழந்தைக்குத்தான் இன்று காலை திண்டிவனத்தில் உள்ள தனியார் மஹாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com