நிர்வாகிகளை நிற்கவைத்துப் பேசினாரா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.., நடந்தது என்ன?

அமைச்சர் எம்.ஏர்.கே பன்னீர்செல்வம் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றிவரும் நிலையில், உண்மையில் நடந்தது என்னவென்று தி.மு.க தரப்பில் பேசினோம்..,
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்abc

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தன்னைச் சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகளையும் ஜமாத் நிர்வாகிகளையும் நிற்க வைத்துப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த, ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றிவரும் நிலையில் உண்மையில் நடந்தது என்னவென்று தி.மு.க தரப்பில் பேசினோம்..,

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பாக, அவரது இல்லத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாஜா மொய்தீன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவரும் மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளருமான முஹம்மது யூனூஸ் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை நிற்க வைத்துப் பேசியதாக, புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, அமைச்சரை விமர்சித்து சமூக வலைதளங்களிலும் சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிகளவில் இந்தப் படத்தைப் பகிர்ந்து அமைச்சரை விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ``சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சருமான ஐயா எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார். இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா?

சீமான்
சீமான்

இசுலாமியப் பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றபோகிறது? இசுலாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இசுலாயாமியர்களுக்கு உரிய பிரதிநிதிதுவத்தையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இசுலாமிய பிரதிநிதிகளை சம்மாக உட்கார வைக்ககூட மனமில்லையா?

"கடைப்பிடிக்கமுடியாத சூழ்நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு". மக்களால் மாண்புமிகு அமைச்சர் என்று மரியாதையோடு அழைக்கப்படும் உயர்ந்த பொறுப்பினை வகிப்பவர் சக மனிதர்களை மரியாதையாடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் திராவிட மாடலா?

இதுதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா?

இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா?’’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவ.ஜெயராஜ்
சிவ.ஜெயராஜ்

இந்தநிலையில், இதுகுறித்து திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சிவ.ஜெயராஜிடம் இதுகுறித்துப் பேசினோம்..,

``பொய்யையும் புரட்டையும் பேசி அரசியல் செய்கிற விஷக்கிருமிகள்தான் இதுபோன்று பேசுவார்கள். அமைச்சருடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு, கிளம்பும்போது எடுத்த புகைப்படம் அது. அமைச்சருக்கு பைபாஸ் சர்ஜரி செய்திருப்பதால், உட்கார்ந்த இடத்தில் இருந்து அவர்களை வழியனுப்புகிறார். ஜமாத் நிர்வாகிகளையோ கட்சி நிர்வாகிகளை நிற்கவைத்துப் பேசக்கூடியவர் அல்ல அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தொண்டர்களுடம் மிக எளிமையாகப் பழகக்கூடியவர் . திட்டமிட்டு, பாஜகவினரும் நாம் தமிழர் கட்சியினரும் தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்.

பரங்கிப்பேட்டை ஜமாத் வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய ஜமாத். நிற்க வைத்துப் பேசியதாக அவர்களின் சார்பில் எந்தவொரு அறிக்கையும் வரவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் செய்பவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். திட்டமிட்டு அவதூறு பரப்புவது மட்டுமே அவர்களின் வேலை. அண்ணன் சீமான் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறார். மூளைச்சசலவை செய்யப்பட்ட குற்றவாளிகளைஅண்ணன் சீமான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று’’ என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com