கம்யூனிஸ்ட் கட்சியினர் Target? அரசு உத்தரவால் வெடித்த சர்ச்சை! - கொந்தளிக்கும் தோழர்கள்!
திண்டுக்கல் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர், முகவரி விவரங்களை சேகரிக்க கிராம உதவியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதால் கடும் சர்ச்சை வெடித்துள்ளது. சிபிஎம் எம்.பி. சச்சிதானந்தம், இது ஆங்கிலேயர் கால கைரேகைச் சட்டத்தையும் மீறும் நடவடிக்கை எனக் கடுமையாக விமர்சித்து, குற்றவாளிகள் அல்லாத கட்சியினரின் விவரங்களை ஏன் சேகரிக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு எதாவது திட்டங்களைச் செயல்படுத்தும் போது அந்தத் திட்டம் தகுதியானவர்களுக்குச் சென்று சேர, தகுதியானவர்களின் பட்டியலை அரசு கோருவது வழக்கம். அதற்காக சாதி அடிப்படையிலோ, குடும்ப வருமான அடிப்படையிலோ, கல்வி அடிப்படையிலோ கூட பட்டியல் தயாரிக்கச் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், குறிப்பிட்ட ஒரு கட்சியில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்க அரசு சார்பில் அறிவிக்கை வெளியிட்டிருப்பது தமிழக அரசியலில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை தாலுகா அமைந்துள்ளது. இந்தத் தாலுகாவில் வட்டாட்சியராக அய்யாசாமி என்பவர் பணியாற்றி வந்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, குஜிலியம்பாறை வட்டத்திற்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் திடீரென ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வட்டாட்சியரிடம் வழங்குமாறும், தவறும் கிராம உதவியாளர்கள் மீது தக்க நடவடிக்கை பாயும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. இந்நிலையில், சிபிஎம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், “இந்தியாவில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்தில்கூட இதுபோன்ற உத்தரவுகளை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை. ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் விவரங்களைச் சேகரிக்கச் சொல்லி அறிக்கை அனுப்பும் அளவிற்கு தற்போது குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், “மணல் கடத்துவோர், ஆக்கிரமிப்பாளர்கள், குற்றவாளிகள் உள்ளிட்டோரின் விவரங்களைச் சேகரிப்பதைவிட, கட்சியினரின் விவரங்களைச் சேகரிப்பது ஏன்?” என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுமக்கள் வட்டாட்சியரைச் சந்திப்பதற்கு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மட்டுமே மனு கொடுக்க வர வேண்டும் என்றும், மனு கொடுக்க வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக் கூடாது என்றும் அறிவிப்புப் பலகை வைத்து மக்களை அச்சப்படுத்தும் வகையில் செயல்பட்ட அய்யாசாமி என்ற வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வரும் 20-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் குஜிலியம்பாறை வட்டாட்சியரால் அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெறுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் வட்டாட்சியர் அய்யாசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர

