RTI -ல் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்ததால் சர்ச்சை
தமிழ்நாட்டிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, பொதுமக்கள் மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் பல்வேறு தகவல்களைக் கேட்டுப் பெறுகின்றனர். தமிழ்நாடு அரசின் அலுவலகங்களில் தமிழ், ஆங்கிலம் என கோரும் மொழிகளில் பதில் அளிக்கப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலம், இந்தி என எந்த மொழிகளில் கேட்கப்படுகிறதோ, அந்த மொழியில் பதில் அனுப்பப்படும்.
நடைமுறை இவ்வாறு இருக்க, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திடம் சில தகவல்களைக் கோரியிருந்தார். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை அவர் கேட்டிருந்தார். இந்தக் கடிதத்தை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு பகிர்ந்த மத்திய அரசு, விண்ணப்பதாரருக்கு பதிலளிக்கும்படி பணித்திருந்தது. அதன்படி டெல்லியில் இருந்து தகவல்களை அனுப்பிய ஒரு மருத்துவமனை, இந்தியில் பதில் அனுப்பியுள்ளது. ஆங்கிலத்தில் பதில் அளிக்காமல் இந்தியில் தகவல்களை அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.