அமைச்சர் பொன்முடியும்.. தொடர் சர்ச்சை பேச்சுக்களும்!
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த பொன்முடி தற்போது அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இவர் திருக்கோயிலூர் எம்எல்வாகவும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
முன்பு உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சமீபத்தில், சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பின்னர் அவருக்கு மீண்டும் வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
வனத்துறை அமைச்சராக இருக்கும் இவருக்கு சர்ச்சை பேச்சு என்பது புதிதல்ல. இதற்கு முன்னர் பல சர்ச்சை பேச்சுகளில் சிக்கியுள்ளார்.
பொன்முடியும் சர்ச்சை பேச்சும்!
அதன்படி, கடந்த ஆண்டு மகளிருக்கான விடியல் பேருந்து பயணத் திட்டத்தை பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, ‘பெண்கள் பேருந்தில் ஒசியாக பயணிக்கிறார்கள்’ என்ற பேசியது சர்ச்சையானது.
மேலும், நியாவிலைக்கடை திறப்பு விழா ஒன்றின்போது அங்கிருந்த ஒன்றியக்குழு தலைவரை பார்த்து,’ நீங்கள் பட்டியலினத்தை சார்ந்தவர்தானே’ என்றும் கேட்டதும்,
நிர்வாகிகளை அமரவைக்காமல் நிற்க வைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
மேலும், கோரிக்கைகளை கூறவந்த பெண்ணிடம், “ என்னது குறையா; கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு “ என கோபமாக பேசியிருந்தார்.
இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தநிலையில், ஒரு நாள் முதல்வரே, ‘ நான் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது நிர்வாகிகள் ஏதேனும் ஒரு புதுப்பிரச்னைகளை உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சத்திலேயே எழ வேண்டி இருக்கிறது. என் மனது புண்படுகிறத. எனவே கட்சியின் மூத்தநிர்வாகிகள் பொதுஇடங்களில் நாகரீகமாகவும் கண்ணியத்தோடும் நடந்துகொள்ள வேண்டும் .’ என்று அறிவுரையை வழங்கியிருந்தார்.
இந்தநிலையில்தான், மீண்டும் பெண்களுக்கு எதிராகவும், சைவம், வைணவம் பற்றியும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதும் கடும் கண்டனத்தை பெற்றுக்கிறது. இவரது பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழியும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், பொன்முடியில் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது திமுக துணை பொதுச்செயலாளர்களாக கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், ஐ.பெரியசாமி, ஆகியோர் இருக்கின்றனர். பொன்முடியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டநிலையில், கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த திருச்சி சிவாவை விடுவித்து புதிய துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளார் திமுக தலைவரும், முதல் - அமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலின் பெயரில் கடிதம்!
பொதுவாக ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதை பொதுச்செயலாளர்தான் செய்வது வழக்கம். அரிதினும் அரிதாகவே தலைவர் முடிவு எடுப்பார்.
ஆனால், பொன்முடி விஷயத்தில் திமுக தலைவரான ஸ்டாலினே கடிதம் எழுதியிருப்பது திமுகவினரிடையே ஒரு அச்சத்தையும், இப்படி பேசுபவர்களுக்கெல்லாம் எச்சரிக்கையையும் கிளப்பியிருக்கிறது.இந்தநிலையில், அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.