சர்ச்சைக்குரிய புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியானதால் மாணவி எடுத்த விபரீத முடிவு
திருத்துறைப்பூண்டி அருகே ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தனது புகைப்படங்கள் வெளியானதால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் லோகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவியின் புகைப்படத்தை சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் லோகேஷ் பதிவிட்டாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.