“என் மீதான புகாரை சந்திக்க தயார்”- ஆண்டாள் கட்டுரை குறித்த வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து

“என் மீதான புகாரை சந்திக்க தயார்”- ஆண்டாள் கட்டுரை குறித்த வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து
“என் மீதான புகாரை சந்திக்க தயார்”- ஆண்டாள் கட்டுரை குறித்த வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதாக கூறி பதிவான வழக்கை தான் சந்திக்க தயாராக இருப்பதாக கூறி, அந்த வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை கவிஞர் வைரமுத்து வாபஸ் பெற்றுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி "தமிழை ஆண்டாள்" என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து, தமிழ் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், பெண் தெய்வம் ஆண்டாள் குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  சமுதாய நல்லிணக்க பேரவையைச் சார்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி  கவிஞர் வைரமுத்து  உயர்நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஆண்டாள் குறித்த கருத்து தன்னுடைய கருத்து அல்ல எனவும்,  அமெரிக்க எழுத்தாளர் கருத்தை தாம் சுட்டிகாட்டி இருந்ததாகவும் கூறியிருந்தார். தவறான கருத்துகள் எதையும்  குறிப்பிடவில்லை எனவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவோ கருத்து தெரிவிக்கவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வைரமுத்துவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வைரமுத்து தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி எம். தண்டபாணி முன் இன்று  விசாரணைக்கு வந்தது. 

அப்போது வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை திரும்ப பெறுவதாகவும், புகாரின் மீதான விசாரணை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதை ஏற்று வைரமுத்து மனுவை திரும்ப பெற அனுமதித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com