தொடர் கனமழை : திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
திருவாரூரில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்தமிழகம், தெற்கு கேரளா, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கியதாக தெரிவித்தார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்று கூறிய அவர் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் பல இடங்களில் தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை தொடர்வதால், அங்கு பணிக்கு செல்வோர் மற்றும் கல்வி நிலையங்கள் செல்லும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த சூழலில் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய விடுமுறையால் மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

