தொடர் மழையால் உயர்ந்த நீர்வரத்து...பவானிசாகர் அணை அருகே வாழ்வோருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பவானி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கூடலூர் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மாயாற்று வெள்ளமும் பவானி ஆற்று நீரும் பவானிசாகர் அணையில் கலப்பதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1564 கனஅடியில் இருந்து 2637 கன அடியாக அதிகரித்துள்ளது.
பெருந்துறை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அணையில் இருந்து வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.28 அடியாக உயர்ந்துள்ளது. ஒரிரு நாளில் அணை நீர்மட்டம் 104.50 அடியை எட்டுவதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளது.
இதையடுத்து பவானிசாகர் அணை நீர்வளத்துறை அதிகாரிகள் பவானி ஆற்றில் அருகில் வாழ்வோருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணை பாதுகாப்பு கருதி 104.50 அடிக்கு மேல் வரும் நீர்வரத்து பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இரவு 10 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 104.26 அடி, (105 அடி) நீர்வரத்து 2637 கனஅடி, நீர் வெளியேற்றம் ஆற்றில் 300 கனஅடி, நீர் இருப்பு 32.17 (32.8) ஆக உள்ளது.