கதவை திறந்தால் வரும் செல்போன் திருடர்கள் - காவல்துறை அலர்ட்
சென்னையில் இரவு நேரங்களில் கோடை வெப்பத்தை தணிக்க கதவுகள் திறந்திருக்கும் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கதவை திறந்தால் காற்று வருகிறதோ இல்லையோ... திருடர்கள் வந்துவிடுவார்கள் என மக்களை புலம்ப வைத்திருக்கிறது சென்னை வடபழனியில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்கள். சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரியும் வடபழனி மசூதி தெருவைச் சேர்ந்த ஜெய கிருஷ்ணன் என்பவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது அவரின் செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளன.
வடபழனி சிவன் கோயில்தெருவைச் சேர்ந்த முகமது தல்கா, என்பவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோதும் வீட்டில் இருந்த 3 செல்போன்கள் திருடுபோய் உள்ளன. இவர்கள் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்தும் செல்போன்களின் சிக்னலை வைத்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், சிதம்பரத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் விருதாசலத்தைச் சேர்ந்த சிங்கார வேலன் காவல்துறையினர் பிடியில் சிக்கினர். பேச்சலர்ஸ் தங்கியிருக்கும் இடங்களை நோட்டமிட்டு அவர்கள் காற்றுக்காக கதவை திறந்துவைக்கும் நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை திருடி சென்றது விசாரணையில் அம்பலமானது.
ஜனார்த்தனன் மீது பள்ளிக்கரணை, மேடவாக்கம், தி.நகர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், மற்றும் 4 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கோடை காலத்தில் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டாம் என துண்டுபிரசுங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். கதவை திறந்தால் காற்று மட்டும் வராது திருடர்களும் வருவார்கள். கவனம் தேவை என அறிவுறுத்துகின்றனர் காவல்துறையினர்.