நீதிமன்றம் வரை சென்ற தவறான உப்பு விளம்பரம்.. இறுதியில் கிடைத்த உத்தரவு என்ன தெரியுமா?

நீதிமன்றம் வரை சென்ற தவறான உப்பு விளம்பரம்.. இறுதியில் கிடைத்த உத்தரவு என்ன தெரியுமா?
நீதிமன்றம் வரை சென்ற தவறான உப்பு விளம்பரம்.. இறுதியில் கிடைத்த உத்தரவு என்ன தெரியுமா?

இந்து உப்பு குறித்த தவறாக விளம்பரத்தை பார்த்து ஏமார்ந்து மன உளைச்சலுக்கு ஆளான நபருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடாக வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

திருவாரூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் திருவாரூர் சஹாரா சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ADJ Rock Salt Powder இந்து உப்பு 500 கிராம் வாங்கி 6 மாதமாக உபயோகித்துள்ளார். அந்த நிறுவனத்தின் துண்டு விளம்பர பிரசுரத்தில், உப்பை பயன்படுத்தினால் உயர் ரத்த அழுத்தம் சீராகும், அதிக சர்க்கரை அளவை குறைக்கும், இதயத்தை உறுதியாக்கும், தைராய்டு நோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் என குறிப்பிட்டிருந்தது. இதை நம்பி உப்பை வாங்கி பயன்படுத்தியதில் எவ்வித முன்னேற்றம் இல்லை.

சாதாரண உப்பைவிட இந்து உப்பு மருத்துவ குணம் நிறைந்தது என்று இதுவரை எந்த ஒரு அறிவியல் ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், இதுபோல் நுகர்வோர்களை ஏமாற்றும் நோக்கத்தோடு நேர்மையற்ற வணிக நடைமுறையை பயன்படுத்தி விற்பனை செய்துள்ள உப்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் செல்வகுமார் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில், ’’தவறாக வழிநடத்தும் விளம்பரத்தை பொருத்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 - ன் படி புது தில்லியில் உள்ள மத்திய நூகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மட்டுமே விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, உப்பு விற்பனை செய்யும் சென்னையைச் சேர்ந்த கிளாசிக் சாய்ஸ் நிறுவனத்தின் மீது மத்திய நூகர்வோர் பாதுகாப்பு அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கு அனுப்பப்படுகிறது. உப்பு நிறுவனம் தவறாக வழிநடத்தும் விளம்பரம் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை செய்துள்ளதற்காக இழப்பீடு தொகையாக ரூ. 2 லட்சத்தை தமிழ்நாடு மாநில நுகர்வோர் நலநிதி கணக்கில் செலுத்த வேண்டும். புகார்தாரான செல்வகுமாருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com