ஜூன் 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

ஜூன் 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?
ஜூன் 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா?

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும் 177.2 டி.எம்.சி காவிரி நீரை வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சியும் ஜூலை மாதம் 31.24 டிஎம்சியும் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

பிலிகுண்டுலு பகுதியில் உரிய நீர் வருவதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் எனவும் கூறியிருந்தார். நடப்பு மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இதுவரை ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகம் வந்துள்ள சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நீதிமன்ற உத்தரவின் படியும், ஒவ்வொரு மாநிலங்களில் பெய்துள்ள மழையின் அடிப்படையிலும், அணைகளில் உள்ள நீரின் இருப்பை பொறுத்தும் நீர் பங்கீடு செய்வது வழக்கம். தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு முறைப்படி நீரை வழங்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் தொடர்பாகவும் தமிழக அரசு விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com