சோழர் அருங்காட்சியகம்
சோழர் அருங்காட்சியகம்web

தஞ்சை | 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான அறிவிப்பு.. என்னவானது சோழர் அருங்காட்சியகம்?

தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் ஆரம்பகட்ட பணியை கூட தொடங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Published on

செய்தியாளர் - ந.காதர் உசேன்

தமிழ் மொழி, விவசாயம், நீர் மேலாண்மை, வணிகம், கட்டிடக்கலை ஆகியவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சோழர்கள் ஆட்சி செய்தனர். தெற்காசியாவின் பெரும் பகுதியை ஆண்டு, சோழ மன்னர்களில் தலைசிறந்த ராஜராஜ சோழன், குடவோலை முறை மூலம் மக்களாட்சியை உலகுக்கு உணர்த்தியவர்.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

பிரமாண்டத்தின் உச்சமான இவர் எழுப்பிய தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாய் வானுயர்ந்து நிற்கிறது. தஞ்சை பெரிய கோவிலை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். எவ்வித தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட இதன் கட்டுமானம் உலக வல்லுனர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.

சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என வெளியான அறிவிப்பு!

வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் வெறும் காட்சி பருளாக மட்டும் கண்டு செல்லாமல் சோழர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் சோழர் அருங்காட்சியகம் தஞ்சையில் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த 2023ல் தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழன்

இந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகளாக பணியை தொடங்காமல் கிடப்பில் பேட்டுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது. சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்த பிறகு அந்த துறையை பார்க்கக்கூடிய அமைச்சர் சாமிநாதன் இரண்டு முறை தஞ்சைக்கு வந்து இடத்தை ஆய்வு செய்து விரைந்து கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் எந்த ஒரு அசைவும் இன்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய பட்ஜெட்டில் ரூ.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பெரிய கோயிலில் இருந்து சுமார் 250 மீட்டரில் 11 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக இந்த பணி தொடங்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் விரைந்து இந்த பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

உலக மக்கள் அனைவரும் சோழர்களின் ஆட்சி காலத்தையும் அவர்களது வெற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் தஞ்சை மக்கள்.

2 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள்..

இது கறித்து தஞ்சையை சேர்ந்த வழக்கறிஞர் சந்திரகுமார் நம்மிடம் தெரிவிக்கும்போது, தஞ்சைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் அவர்கள் தஞ்சை பெரிய கோவில், தஞ்சை அரண்மனை இவற்றை கண்டு செல்வதோடு முடிந்து விடுகிறது. இந்தியா முழுவதும் ஆட்சி செய்த சோழர்களின் ஆட்சி காலத்தை பற்றி அவர்கள் அறியும் வகையில், ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதன் அடிப்படையில் அரசு அறிவித்து இரண்டு ஆண்டுகளாக இது கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில்

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர மாவட்ட செயலாளர் தஞ்சையை சேர்ந்த முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான ராஜேஷ்வரன் தெரிவிக்கும்போது, தஞ்சை பெரிய கோவில் மற்றும் அதை அருகேயுள்ள சிவகங்கை பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சத்தை கணக்கில் எடுத்து இதனை உலக அதிசயத்தில் ஒன்றாக அறிவிக்க வேண்டும், சோழர் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், சோழர் வரலாற்று நூலகம் அமைக்க வேண்டும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும், ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.

அதன் அடிப்படையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இரண்டு ஆண்டுகள் ஆனபோதிலும் தற்போது வரை எந்த ஒரு பணியும் தொடங்கவில்லை. இதனை திட்டமிட்டு அரசியல் சென்டிமென்ட்டுக்காக இத்திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்து ஒரு செங்கல் வைத்ததை துணை முதல்வர் செங்கலை காட்டி சுற்றுப்பயணம் செய்தவர். இத்திட்டம் அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ஒரு செங்கல் கூட இந்த இடத்தில் வைக்கவில்லை, இதற்கு முழுக்க முழுக்க அரசியல் தான் காரணம் என கூறினார். 

இது குறித்து திருச்சி அருங்காசியக காப்பாட்சியர் மணிமுத்துவிடம் விளக்கம் கேட்டோம், அருங்காட்சியம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது திட்டம் தயார் செய்த பிறகு ஒப்புதல் பெறப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com