முத்தலாக் வாக்கெடுப்பில் அதிமுக நிலை ‘விடுகதை’ - ப.சிதம்பரம் விமர்சனம்
முத்தலாக் தடை சட்ட மசோதாவில் அதிமுகவின் நிலை விடுகதை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. கடந்த 25ஆம் தேதி மக்களவையில் நிறைவேறியிருந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறி சட்டமானது. இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதன்பின்னர் மசோதா நிறைவேறியது.
இந்நிலையில் அதிமுகவின் நிலை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள். மசோதாவின் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது, அதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை! மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை!” என விமர்சித்துள்ளார்.

