"காமராஜர் பற்றி பேச திருச்சி சிவாவுக்கு தகுதியில்லை”- செல்வப்பெருந்தகை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்தான திமுக எம்பி திருச்சி சிவாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது..
சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி சிவா எம்.பி, காமராஜர் குறித்து பேசினார்.
அதில், ” காமராஜர் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் கண்டனம் கூட்டம் நடத்தினார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும் . அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய உத்தரவிட்டார். ”
கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு "நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறினார்.” என்று திருச்சி சிவா தெரிவித்திருந்தார்.
'வைரவா அந்த விளக்கை அணை' என்று உதவியாளரிடம் கூறி விட்டு படுக்க சென்ற காமராசரின் உயிர் பிரிந்தது என்பதே அனைவரும் அறிந்த செய்தி.இந்நிலையில், இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரின் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், ” காமராஜர் பற்றி பேச திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கு தகுதியில்லை. காமராஜர் குறித்து ஆதாரம் இல்லாமல் திருச்சி சிவா பேசுகிறார். காமராஜர் பற்றி பேசுவதற்கும் குறை சொல்வதற்கும் யாருக்கும் தகுதி இல்லை. ” என்று தெரிவித்துள்ளார்.