தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம்: மூத்த தலைவர்களின் மகன்களுக்கு பதவி!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்கள், துணை தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல கே.வி. தங்கபாலும், ஈவிகேஎஸ் இளங்கோவன், அன்பரசு போன்ற மூத்த தலைவர்களின் மகன்களுக்கும் கட்சியில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோபண்ணா உட்பட 32 பேர் துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக சட்டப்பேரவை பணிகளை மேற்கொள்ள நிர்வாகிகளை நியமித்தும் காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, “தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதன் அடிப்படையில் இந்த பதவிகள் நியமிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் தோறும் பயணம் செய்து அதன் அடிப்படையில் கட்சியின் தலைமையிடம் அனுமதி பெற்றே நியமனம் நடைபெற்றுள்ளது” என்றார்