கன்னியாகுமரி | S.I.R-க்கு எதிரான போராட்டத்தை புறக்கணித்த காங். கட்சி! சொன்ன காரணம் இதுதான்!
நாகர்கோவிலில் நடந்த எஸ்.ஐ.ஆர் க்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். இது பேசுபொருளான நிலையில் அதற்கான விளக்கம் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்களர் திருத்தப் பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில், இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்தான், எஸ்.ஐ.ஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் புறக்கணித்திருந்தது.
இந்நிலையில் தான், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விஜய் வசந்த் எம்பி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏ-வுமான ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தி.மு.க சார்பில் எஸ்.ஐ.ஆர் யை கண்டித்து நாகர்கோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிலர் பங்கேற்காத காரணம் பெருந்தலைவர் காமராஜரின் படம் பேனரில் இடம் பெறாதது ஆகும். இது வருத்தத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் புறக்கணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான பயிற்சியில்லை. ஒரு மாத காலத்திற்குள் இதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கி உள்ளார்கள். இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் பல குளறுபடிகள் உள்ளன. இதனை கண்டித்து குமரிமாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிறார் 17-ந் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது" எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

