முத்திரை பதித்த காங்கிரஸ் - 25 இடங்களில் போட்டியிட்டு 18ல் வெற்றி

முத்திரை பதித்த காங்கிரஸ் - 25 இடங்களில் போட்டியிட்டு 18ல் வெற்றி

முத்திரை பதித்த காங்கிரஸ் - 25 இடங்களில் போட்டியிட்டு 18ல் வெற்றி
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 10ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு திரும்புகிறது திமுக. திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தரும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. இக்கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே, அக்கட்சிக்கு குறைந்த இடங்களையே வழங்க வேண்டும் என்று பல முனையில் இருந்தும் குரல்கள் எழுந்தன. ஏன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை சுட்டிக்காட்டி, குறைந்த இடங்கள் தந்தாலும் மனநிறைவு கொள்ள வேண்டும் எனக்கூறும் நிலை ஏற்பட்டது.

காரணம் அதற்கு முந்தைய 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள். அத்தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. வெற்றி விகிதம் என்பது 19 விழுக்காடாகும். இதில் முறையாக செயல்பட்டு கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது குறைவான இடங்களில் போட்டியிட்டு மீதமுள்ள இடங்களை திமுகவிடமே வழங்கியிருந்தாலோ, திமுக கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் என்பது பெரும்பான்மையானோர்களின் வாதமாக இருந்தது. கட்சியில் இருக்கும் தலைவர்களை திருப்திப்படுத்த இடங்களைப் பெறும் காங்கிரஸ் அதில் வெற்றி வாய்ப்பை இழந்து, கூட்டணிக்கும் பாரமாக இருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் 40க்கும் அதிகமான இடங்களைக் காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 25 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் தேர்விலும் பல சிக்கல்கள் எழுந்த நிலையில், அக்கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளில் மிகக்குறைவான தொகுதிகளிலேயே வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. காரணம் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி விகிதத்தின் அடிப்படையில் அக்கட்சி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியோ 6 இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளின் வெற்றி விகிதமானது 67 விழுக்காடாகும். ஆனால் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 25 இடங்களில் 18 இடங்களைப் பெற்றுள்ளது. அதன் வெற்றி விகிதமானது 72 விழுக்காடாகும். இதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் தனது செயல்பாட்டை துரிதமாக்குவதற்கான வழி பிறந்துள்ளதாக கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.                                                   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com