"முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்பேன்” - தமிழச்சி தங்க பாண்டியனுக்கு காங்., பாஜக கண்டனம்!

”விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தால், முள்ளிவாய்க்கால் துயர நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்பேன்” என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழச்சி தங்க பாண்டியன்
தமிழச்சி தங்க பாண்டியன்புதிய தலைமுறை

புதிய தலைமுறையின் தி ஃபெடரல் (the federal) ஆங்கில இணையதள செய்தி ஊடகத்திற்கு திமுகவைச் சேர்ந்த தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு நேர்காணல் ஒன்று அளித்திருந்தார்.

அதில், ”வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புவதாக இருந்தால், அது யாராக இருக்கும்” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், “மேதகு தேசிய தலைவர் பிரபாகரன்” எனக் கூறினார்.

பிரபாகரனை சந்தித்திருந்தால் அவரிடம் என்ன கேட்டிருப்பீர்கள்” என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ”முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரி இருப்பேன்” என்றும் கூறி இருந்தார்.

தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த கருத்து பேசு பொருளாகியுள்ளது. அவரது பேச்சுக்கு காங்கிரஸ், பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் வெளியிட்ட அறிக்கையில், நமது நாட்டின் பிரதமரை மிகக் கொடூரமான முறையில் கொன்ற ஒருவரை புகழ்வது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார். இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர், இப்படி பேசி இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள சிவகங்கை எம்.பி, கார்த்தி சிதம்பரம், ”பிரபாகரனை புகழ்வது காங்கிரஸ் கட்சியில் உள்ள யாருக்கும் பிடிக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார். ”ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவரை புகழ்வது என்பது ஏற்க முடியாது” என தெரிவித்த கார்த்தி சிதம்பரம், ”பிரபாகரன், வீரப்பனின் தமிழ்தேசம் என்பது இந்துத்துவா தேசியவாதத்தை போன்றது” எனக் கூறினார்.

இதையும் படிக்க: ”என்உயிருக்கு ஆபத்துனா அதிபர்தான் காரணம்”-இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிநீக்கமும் பின்னணியும்

திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் பேட்டி குறித்து கருத்து பதிவிட்டுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன், முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு காரணம் திமுகதான் என்பதை தமிழச்சி தங்கபாண்டியன் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்திருப்பதை, இந்த பேச்சு உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை, முன்னாள் பிரதமரை கொன்ற ஒரு இயக்கத்தை வழிநடத்திய ஒருவரை, தேசிய தலைவர் என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வது திமுகவின் ஆணவத்தை வெளிப்படுத்துவதுபோல் அமைந்துள்ளதாக விமர்சித்துள்ளார். அதோடு, இப்படி கருத்து தெரிவித்ததை கண்டிக்கும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியால் வெளியேற முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை, திமுக - காங்கிரஸ் கூட்டணி இணைந்து காணும் நிலையில், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சு, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com