ரவுடி கும்பல் அதிகாரப் போட்டியால் தொடரும் கொலைகள்.. உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!
காஞ்சிபுரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் தொடர் கொலைச் சம்பவங்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பல்களை தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். அதேபோல உண்மை சம்பவங்கள் நடக்கும் நகரமாக காஞ்சிபுரம் மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்பட்டவர் பிரபல ரவுடி ஸ்ரீதர் தனபாலன்.
நில அபகரிப்பு, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஸ்ரீதர், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக இருந்தார். காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாகவும், நிழல் உலக தாதாவாகவும் வர்ணிக்கப்பட்ட ஸ்ரீதர் தனபாலன், கம்போடியாவில் விஷம் குடித்து சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலையால் பிரச்னை ஓய்ந்தது என காவல்துறை நினைத்திருந்த நிலையில், அடுத்த ஸ்ரீதர் தனபாலன் யார்? அவரின் இடத்தை யார் பிடிப்பது என்ற அதிகாரப்போட்டி, ரவுடி கும்பல் இடையே தொடங்கியுள்ளது. ஸ்ரீதரின் மைத்துனரான தணிகா என்ற தணிகாசலமும், ஸ்ரீதரிடம் கார் ஓட்டுநராக இருந்த தினேஷும் இரு குழுக்களாக பிரிந்து, அடுத்த ரவுடி சாம்ராஜ்ஜியத்தின் அத்தியாத்தை காஞ்சிபுரத்தி தொடங்கி வைத்துள்ளனர். யார் பெரியவர் என்பதை நிரூபிக்கும் அதிகாரப் போட்டியில் இந்த இரு குழுக்களுக்கு உள்ளாகவே அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர்.
இதுவரை ரவுடி தணிகாசலம் தரப்பில் மூவரும், ரவுடி தினேஷ் தரப்பில் ஒருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் நீட்சியாக தற்போது, தணிகாசலத்தின் கூட்டாளியான ஜீவாவை, திட்டமிட்டு கொலை செய்துள்ளது தினேஷ் தரப்பு. ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மப்பேட்டில் தலைமறைவாக வாழ்ந்த ஜீவாவை தொடர்ந்து கண்காணித்த தினேஷ் குழு, சுங்குவார்சத்திரத்தை அடுத்த பன்னூரில் வைத்து கொலை செய்துள்ளது.
கொலை நடந்த இடத்தில் அடுத்தடுத்து 2 ஸ்பீட் பிரேக்கர்கள் இருந்ததால், நண்பர் கோபியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ், மெதுவாக சென்றுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதையடுத்து இருவரையும் முகத்தை சிதைத்து வெட்டி சாய்த்தது. ஜீவாவுக்கு விரிக்கப்பட்ட வலையில், தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் வேலை செய்யும் கோபியும் சிக்கிக் கொண்டார். இந்தப் பகுதியில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் தணிகாசலம், தினேஷ் கும்பல்களின் நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்