சரியாக சில்லறை தராத பயணியை தரக்குறைவாக திட்டித் தீர்த்த நடத்துநர்

சரியாக சில்லறை தராத பயணியை தரக்குறைவாக திட்டித் தீர்த்த நடத்துநர்

சரியாக சில்லறை தராத பயணியை தரக்குறைவாக திட்டித் தீர்த்த நடத்துநர்
Published on

பயணச்சீட்டு எடுத்துவிட்டு மீதி சில்லறை கேட்டதற்கு ஆபாசமாக திட்டியதாக நடத்துநர் மீது பட்டதாரி இளைஞர் ஒருவர் தாம்பரம் பணிமனை மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டை சேர்ந்தவர் சிவகுமார். எம்சிஏ பட்டதாரி. வேலை தேடி சென்னைக்கு வந்த அவர் கந்தன்சாவடி அருகே அறை எடுத்து தங்கியிருக்கிறார். இந்நிலையில் வேலை தேடி ‘சென்னை ஒன்’ தொழில்நுட்ப பூங்காவிற்கு நேர்முகத் தேர்விற்கு சென்றுள்ளார். இன்டர்வியூவ் முடிந்ததும்  சென்னை ஒன் பேருந்து நிலையத்திற்கு வந்த அவர் அங்கிருந்து கந்தன்சாவடி செல்வதற்காக சென்னை மாநகரப் பேருந்து 91வி-யில் ஏறியுள்ளார். இப்பேருந்து திருவான்மியூரிலிருந்து வண்டலூர் வரை செல்லும் பேருந்து ஆகும். பேருந்தில் ஏறியதும் டிக்கெட் வாங்குவதற்காக நடத்துநரிடம் 10 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் டிக்கெட் விலை ரூபாய் 7 மட்டுமே. எனவே சிவகுமார் நடந்துநர் சின்னச்சாமியிடம் மீதி சில்லறையான 3 ரூபாயை கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் சில்லறை இல்லை எனத் தெரிவித்த சின்னச்சாமி, சிவகுமாரிடம் மிக கடுமையாக நடந்திருக்கிறார். சில்லறை இல்லையென்றால் உடனே பேருந்தை விட்டு இறங்கும்படி கண்டித்துள்ளார்.

அத்தோடு “ஏன்டா பிழைக்க வந்த ஊருல சில்லற கூட இல்லாம வர்றீங்க” என கடுமையாக திட்டியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் பேருந்தில் இருந்து இறங்கும் வரை திட்டியிருக்கிறார். தன்னிடம் மட்டுமில்லாமல் சக பயணிகள் பலரிடமும் சின்னச்சாமி இப்படி நடந்ததாக சிவகுமார் தெரிவித்துள்ளார். சின்னச்சாமியின் கடுமையான வார்த்தைகளால் மன உளைச்சலுக்கு ஆளான சிவகுமார் இதுகுறித்து புகார் அளிக்க, திருவான்மியூர் பணிமனைக்கு சென்றிருக்கிறார். ஆனால் நீங்கள் தாம்பரம் பணிமனையில்தான் புகார் கொடுக்க வேண்டும் என அவர்கள் கூறியிருக்கின்றனர். எனவே தாம்பரம் பணிமனைக்கு சிவகுமார் சென்றிருக்கிறார். ஆனால் அங்கேயும் புகாரை ஏற்க முதலில் மறுத்திருக்கின்றனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் புகாரை ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், சிவகுமார் புகார் ஏற்பு ரசீது கேட்டதற்கு அவர்கள் அதனை வழங்கவில்லை. இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய சிவகுமார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் பணிமனை மேலாளர் தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக கூறியுள்ளார். பொதுவாகவே அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நடத்துநர்கள் சரியாக பணத்தை வாங்கிக் கொள்வதாக தெரிவிக்கும் பயணிகள், ஆனால் அவர்கள் ஒரு ரூபாய், 2 ரூபாய் தர வேண்டும் என்றால் மீதி பணத்தை சரியாக தராமல் சென்றுவிடுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com