\
சேகர் ரெட்டி டெல்லியில் தினமும் கையெழுத்திட உத்தரவு

சேகர் ரெட்டி டெல்லியில் தினமும் கையெழுத்திட உத்தரவு

சேகர் ரெட்டி டெல்லியில் தினமும் கையெழுத்திட உத்தரவு
Published on

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிய குற்றச்சாட்டில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மார்ச் 20-ஆம் தேதி சேகர் ரெட்டி உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி இவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது, சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்தனை ஜாமீனுக்கான பிரமாணப் பத்திரங்களை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்வதோடு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் சேகர் ரெட்டி கூட்டாளியான ராமச்சந்தரன், ரத்தினம் ஆகியவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com