மோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்
அழகிப் போட்டி நடத்துவதாக கூறி ரூ. 50 ஆயிரம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாகக்கூறி மீரா மிதுன் தன்னிடம் 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மீராமிதுனை வரும் 19-ஆம் தேதி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தனர்.
இதையடுத்து பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றுள்ளதால் வெளியே வரமுடியாது என்றும் தொழில் போட்டியின் காரணமாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி முன் ஜாமின் வழங்க வேண்டும் என மீராமிதுன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ. 50 ஆயிரம் உத்தரவாத தொகையை செலுத்தவும் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராகி கெயெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.