உரிமம் இல்லை எனக்கூறி மருந்துக் கடைக்கு சீல்வைத்த அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு

உரிமம் இல்லை எனக்கூறி மருந்துக் கடைக்கு சீல்வைத்த அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு
உரிமம் இல்லை எனக்கூறி மருந்துக் கடைக்கு சீல்வைத்த அதிகாரிகளை கண்டித்து கடையடைப்பு

உரிமம் இல்லை எனக்கூறி மருந்துக் கடையை பூட்டிச் சென்ற நகராட்சி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து 50-ற்கும் மேற்பட்ட மருந்துக் கடைகளை அடைத்து கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அத்தியாவசிய கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கி வரும் நிலையில் 10 மணிக்கு மேல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 10 மணிக்கு மேல் மக்கள் மிக அத்தியாவசியத் தேவைக்காக மருந்துக்கடைகள் மட்டும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை கூடலூர் நகராட்சி ஆணையாளர் திடீரென ஒரு மருந்து கடையில் ஆவணங்களை பரிசோதனை செய்தார். அப்போது நகராட்சி மூலம் வழங்கப்படும் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக் கூறி எந்தவித நேர காலமும் எச்சரிக்கையும் கொடுக்காமல் உடனடியாக அந்த கடையை அடைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிகாரிகளை கண்டித்து கூடலூர் நகர பகுதியில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட மருந்துக் கடை உரிமையாளர்கள் உடனடியாக அனைத்து கடைகளையும் அடைத்தனர். பொதுவாக கடந்த வருடத்தில் இருந்து கொரோனா தொற்று காரணமாக எந்த கடைகளுக்கும் இதுவரை உரிமம் புதுப்பித்து தராத நிலையில் ஒரு கடையை மட்டும் அந்த அதிகாரி அடைத்து விட்டு சென்றதாக கூறி அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

இதையடுத்து சுமார் ஒருமணி நேரம் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மருந்து கடைகளை திறந்தனர். பொதுவாக காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பல மக்கள் அந்த நேரங்களில் மருந்து பொருட்களை வாங்கவும் தனியார் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்று மருந்துகளை வாங்வும் குவிந்த நிலையில் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com