"தலித் மாணவர்களை மட்டும் ஆசிரியர் தொட மறுக்கிறார்" - தமிழக பள்ளிகளில் செய்த ஆய்வில் ஷாக் தகவல்கள்!

தமிழகத்தில் பள்ளிகளில் சாதிய பாகுபாடுகள் பரவலாக காணப்படுவது ஆய்வுகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பள்ளிகளில் சாதியப்பாகுபாடுகள்
பள்ளிகளில் சாதியப்பாகுபாடுகள்pt web

சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 36 மாவட்டங்களில் உள்ள 321 அரசு பள்ளிகள், 58 அரசு உதவிபெரும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள் என 441 பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 644 மாணவர்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

250 பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் 3 மாதங்கள் நடத்திய ஆய்வில், 90 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் கலந்துகொண்டனர். 10 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது. அதன்மூலம் 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் தீண்டாமை உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவரை தொடாமல் இருப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் தருவது உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே சமூக நீதிக்கான முன்னோடியாக திகழும் தமிழகத்திலேயே இது போன்ற நிலை இருப்பது பெரும் கவலை தருவதாக கூறுகிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாமுவேல் ராஜ்.

அவர் கூறுகையில், “இந்த தமிழ்நாட்டில் இதுபோன்ற பாகுபாடுகள் இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. சமூகநீதிக்கென்று அவ்வளவு பங்களிப்புகளைச் செய்த ஒரு மாநிலம் தமிழ்நாடு. இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு மத்தியிலேயே சாதியப்பாகுபாடு உள்ளது. குறிப்பிட்ட பள்ளியில் தலித் மாணவர்களை மட்டும் ஆசிரியர் தொட மறுக்கிறார். குறிப்பிட்ட சில பள்ளிகளில் தனித்தனி வரிசைகளில் நின்று மாணவர்கள் சத்துணவைப் பெறுகின்றனர். மனதிற்குள் தீண்டாமை இல்லை. பௌதீகமான வடிவத்தில் இருவரிசையில் நிற்கிறார்கள். தனித்தனி பள்ளிகளில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். சுவரில் சாதிகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. இது பகீரங்கமான சாதியின் வெளிப்பாடு” என்கிறார்.

சாதிய வேறுபாடுகளை களையும் பணியை பள்ளிகளில் இருந்து தொடங்குவதுதான் சரியானது என குறிப்பிடும் இந்த அமைப்பு, சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கென மாநில அளவில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகள் தோறும் சமத்துவக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com